Showing posts with label மகிந்த ராஜபக்ஷ. Show all posts

பிரபாகரனை மீட்க சோனியா காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது ???

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார். பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.
இந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.
எனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புது டில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார். இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்களக் குடியேற்றத்திற்கு முஸ்தீபு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும் மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை
கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;

முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.

இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.

அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.

1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.